நல்ல கேரக்டர கொடுங்க! – தேஜாஸ்ரீ
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக குத்துப் பாட்டுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான படங்களில் குத்துப் பாட்டு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. சில படங்கள் குத்துப் பாடலால்தான் வசூலையே வாரிக் குவிக்கிறது என்று கூட சொல்லலாம். அந்த வரிசையில் தமிழகத்தின் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியது “ஒற்றன்’ படத்தில் இடம் பெற்ற “”சின்ன வீடா வரட்டுமா… பெரிய வீடா வரட்டுமா…” என்ற பாடல்.
இந்தப் பாடலுக்கு மட்டும் வந்து ஆட்டம் போட்ட தேஜாஸ்ரீக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், எல்லாம் ஒரு பாடலுக்கு ஆட மட்டும்தான். நல்ல பாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருந்த தேஜாஸ்ரீயை கோலிவுட் கண்டுகொள்ளாததால் அவர் மராட்டிப் பக்கம் போனார்.
அங்கு தொடர்ந்து காமெடி படங்களில் நாயகியாக நடித்தவரை அங்குள்ள ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். சமீபத்தில் மராட்டியில் இயக்குநர் பரத் யாதவ் இயக்கியிருக்கும் “விசார் ஹர்லா பக்கா’ படத்திலும் தேஜாஸ்ரீ தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழில் நல்ல பாத்திரங்களில் நடிக்க தற்போது வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. அது சம்பந்தமாக சென்னை வந்திருந்தவரை சந்தித்து, உரையாடினோம்.
காமெடி படமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறீங்களே?
மராட்டியில் காமெடிப் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் அங்கு காமெடி படங்களை அதிகம் தயாரிக்கிறார்கள். தற்போது அங்கு மூன்று படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அவை எல்லாமே காமெடிப் படங்கள்தான்!
தமிழில் உங்களுக்கு சரியான வாய்ப்பு அமையவில்லையா?
“ஒற்றன்’ படம் வெளியானபோது எனக்கு பெரிய வரவேற்பு கிடைச்சது. தமிழில் நமக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு நினைச்சேன். அதனால தமிழ் மொழியை கத்துக்கிட்டு, சென்னையிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன். அதன் பிறகு தமிழில் “இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி’, “கள்வனின் காதலி’ உள்ளிட்ட ஒரு டஜன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சில படங்களில் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். காமெடி நடிகர் விவேக் ஸôருக்கு ஜோடியாக “சொல்லி அடிப்பேன்’ படத்தில் கூட நடித்தேன். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அந்தப் படத்தில் எல்லாம் என்னோட நடிப்புத் திறனை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இதுவரை படம் முழுக்க வருகிற மாதிரி பெரிய படங்கள் எதுவும் அமையாததுதான் வருத்தமாக இருக்கு.
அப்படியான வாய்ப்புகள் வந்திருந்தால் எனக்கு பெரிய பேரும், புகழும், நிறைய வாய்ப்புகளும் கிடைச்சிருக்கும்.
கோலிவுட்டில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிற நடிகையாக நான் அறிமுகமானதால் அப்படியே பல படங்களில் ஒரு பாடலில் ஆட மட்டும் வாய்ப்பு கொடுத்தார்கள்.
அதனால் “”நல்ல கேரக்டர் கொடுங்க…”ன்னு இயக்குநர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். ஆனால் யாரும் அதை ஏற்கவில்லை. அதனால் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதை நிறுத்தினேன். கடைசியில் அதுவே எனக்கு எதிராக அமைந்துவிட்டது!
தமிழில் மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா?
ஆமாம். தர்மலிங்கா என்பவர் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அந்தப் படம் விஷயமாகத்தான் சென்னை வந்திருக்கிறேன். இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். அதில் எனக்கொரு நாயகி வேடம் கிடைச்சிருக்கு. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் நான் எதிர்பார்த்த கதாபாத்திரமும் அமைஞ்சிருக்கு!
நடனக் குழு வைத்திருக்கீங்களாமே?
எனக்கு கதக் நடனம் நல்லா ஆட வரும். அதனால் நானே ஒரு நடனக் குழுவை உருவாக்கியிருக்கிறேன். அந்தக் குழுவை வைத்து நிறைய ஸ்டேஜ் ஷோ பண்றேன். மும்பையில் எங்க டான்ஸ் ஷோ ரொம்ப பிரபலம். அதேபோல நான் இப்போது மராட்டியில் நடித்துக் கொண்டிருக்கும் “பைஹா பைகோ நாஹோ’ படத்திலும் என்னுடைய நடனக் குழுவைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
உங்க ஊரில் வெயில் எப்படி?
ஷோ பிராக்டீஸ், படப்பிடிப்பு என்று இருப்பதால் எனக்கு வெயில் பெருசா தெரியலை. எப்பவும் நம்மை பிஸியாக வச்சுக்கிட்டா வெயில், மழை எதுவும் தெரியாது. மழை வந்தால் எப்படி சூப் சாப்பிடுறேனோ, அதுபோல வெயில் வந்தால் ஜூஸ் சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொள்வேன்! (சிரிக்கிறார்).
Thanks:cinema express






















